கடன் தொல்லையால் விபரீத முடிவு: சேலத்தில் மகளுடன் தம்பதி தற்கொலை
சேலத்தில் உள்ள தங்கும் விடுதியில் கடன் தொல்லையால் மகளுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.;
சேலம்,
சென்னை சூளைமேடு பாலாஜிபவன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 60). இவர் கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி அனுராதா(55). இவர்களுக்கு ஆர்த்தி(22), ஆஷிகா(20) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஆர்த்தி பி.ஏ. ஆங்கிலம் முடித்துள்ளார். ஆஷிகா திண்டுக்கல்லில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சேலம் வந்தார். பின்னர் அவர்கள் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்தநிலையில் நேற்று காலை தங்கும் விடுதியின் வரவேற்பு அறைக்கு போன் செய்த ஆர்த்தி, தங்கள் அறை கதவை திறக்க முடியவில்லை என்றும், வந்து திறந்துவிடுமாறும் கூறினார்.
உடனடியாக விடுதி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அறையை திறந்தனர். அப்போது அறைக்குள் விஜயகுமார், அனுராதா மற்றும் ஆஷிகா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அறையில் ஆர்த்தி மட்டும் தடுமாறிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் செல்வராஜ், அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த அறையில் 2 பூச்சிக்கொல்லி விஷம் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில் கிடந்தன. இதனால் அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மேலும் அந்த அறையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் மீட்டனர். அந்த கடிதத்தில் அவர்கள் எழுதியிருந்தது குறித்து போலீசார் கூறும்போது, ‘கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடன் வாங்கிய விவரத்தையும் கூறி உள்ளனர். மேலும் இந்த கடன்களை தங்களுடைய நகைகள் மூலம் திருப்பி கொடுக்குமாறும், தங்கும் விடுதியில் தற்கொலை செய்வதால் ஓட்டல் உரிமையாளரும், போலீசாரும் தங்களை மன்னித்து விடுமாறும் அந்த கடிதத்தில் கூறி உள்ளனர்’ என போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து விஜயகுமார், அனுராதா, ஆஷிகா ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அறையில் இருந்த டைரியில் எழுதி வைக்கப்பட்டிருந்த செல்போன் எண் மூலம் அவர்களுடைய உறவினர்களுக்கு இதுகுறித்து போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆர்த்தி விஷம் குடித்தும் சாகாததால் பிளேடால் தனது கையில் அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதேபோல் இறந்து கிடந்த ஆஷிகா அருகேயும் ரத்தம் கிடந்ததால் அவரும் தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
இதையடுத்து ஆர்த்தியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறும்போது, ‘ஷியாம் உள்பட 2 பேரிடம் தாங்கள் கடன் வாங்கியதாகவும், அதை திரும்ப செலுத்த முடியாததால் தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததாகவும், மேலும் விவரங்களை கடிதத்தில் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகுமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.