தாராபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது சம்பவம்

தாராபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள். சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்து விட்டது.;

Update:2019-04-12 04:15 IST
தாராபுரம், 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டி.காளிபாளையம் காந்திஜி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 21). அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் கார்த்திக் (18), மற்றும் உதயக்குமாரின் மகன் பிரவீன் (19). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். தற்போது தாராபுரத்தில் மாரியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாரியம்மனை தரிசனம் செய்ய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் டி.காளிபாளையத்தில் இருந்து தாராபுரம் வந்தனர். பின்னர் மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் டி.காளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். தாராபுரம்-கரூர் சாலையில், ரெட்டாரவலசு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூரிலிருந்து கேரளாவிற்கு சிமெண்ட் மூடைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயம் அடைந்த கார்த்திக் மற்றும் பிரவீனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரவீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தவர்கள் 2 பேர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்