உணவின் சுவை அறிய நாக்கு பயன்படுகிறது

மனிதன் உணவின் சுவையை நாக்கின் மூலமே அறிந்து கொள்கின்றான்.;

Update:2019-04-12 13:28 IST
உணவின் சுவை அறிய நாக்கு பயன்படுகிறது. மனிதன் உணவின் சுவையை நாக்கின் மூலமே அறிந்து கொள்கின்றான். மனிதனைப்போல பறவைகளும், விலங்குகளும் தங்கள் நாக்கு மூலம் சுவைப்பதுடன் இரையை பிடிக்கவும் செய்கின்றன. இது குறித்த தகவல்களை காண்போம்.

பச்சோந்தி

தவளை மற்றும் பச்சோந்தி போன்றவை நீளமான நாக்கு கொண்டவை. இதுபோல சில பல்லி இனங்களுக்கும் நீளமான நாக்கு உண்டு. இவை தங்கள் நாக்கை சுருட்டி மடக்கி வாய்க்குள் வைத்திருக்கும். இரையை தூரத்தில் இருந்தே பிடிக்க தங்களது நீளமான நாக்கை பயன்படுத்தும். சற்று தொலைவில் இருந்து கொண்டு நாக்கை மின்னல் வேகத்தில் நீட்டி இரையை ‘லபக்’ என்று பிடித்து உண்ணும்.

பச்சோந்திகளில் ஒருவகை பச்சோந்தி தனது நீளமான நாக்கை 62 வினாடிகளில் 8 முறை மின்னல் வேகத்தில் நீட்டி பூச்சிகளை பிடித்து தின்றுள்ளது.

எறும்புத்தின்னி

தனது நாக்கின் மூலம் உணவை பிடித்து தின்னும் நீளமான நாக்கு கொண்ட விலங்குகளில் ஒன்று எறும்புத்தின்னி ஆகும். இதன் நாக்கு நீளமாகவும், ஈரப்பசை தன்மை கொண்டதாகவும் இருக்கும். இது எறும்பு புற்றுக்குள் தனது நீளமான நாக்கை நுழைத்து வெளியே எடுக்கும் போது அதில் நூற்றுக்கணக்கான எறும்புகள் ஒட்டிக்கொள்ளும். பின்னர் அதை அப்படியே வாய்க்குள் திணித்து சாப்பிடும்.

பாம்புகள்

பாம்புகளுக்கும் நாக்கு உண்டு. இவற்றின் நாக்கு நுனிப்பகுதி பிளவு பட்டதாக இருக்கும். பாம்புகள் தங்கள் நாக்கின் மூலமே வாசனைகளை அறிகின்றன. தங்களது சுற்றுப்பகுதியில் நிலவும் சீதோஷண நிலை, உணவு மற்றும் எதிரியின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனையை அறிதல் போன்றவற்றுக்கு தங்கள் நாக்கை பாம்புகள் பயன்படுத்துகின்றன.

இதனால் தான் பாம்புகள் அடிக்கடி தங்கள் நாக்கை வெளியே நீட்டி உள்ளே இழுக்கின்றன. இதன் மூலம் சுற்றுப்பகுதியில் உள்ள இரை மற்றும் எதிரிகளை பாம்புகள்அடையாளம் கண்டுகொள்கின்றன. இதற்கு ஏற்ப இவற்றின் தலைப்பகுதியில் ‘ஜேகோப்சன்’ என்ற உறுப்பு உள்ளது. உதாரணமாக எலியின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனை காற்றில் கலந்து இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். தனது நாக்கை வெளியே நீட்டுவதன் மூலம் காற்றில் கலந்துள்ள எலியின் வாசனையை ஜேகோப்சன் உறுப்பு அடையாளம் காட்டும்.

நரி

நரி இனங்களில் ஒன்று ‘ஆர்ட் உல்ப்’. இது கழுதைப்புலி இனத்தைச்சேர்ந்தது ஆகும். மற்ற நரிகளில் இருந்து இதன் நாக்கு வேறுபட்டுள்ளது. பிற நரிகளை விட இதன் நாக்கு மிகவும் நீளமாகும். இதன் நாக்கு அவற்றின் கண்கள் வரை நீளம் கொண்டவை. பெரும்பாலும் நாய்கள் போல தங்கள் நீளமான நாக்கை இவை தொங்கவிட்டபடியே இருக்கும். மேலும் இந்த நாக்கின் மூலம் உடல் பாகங்களை நக்கி சுத்தம் செய்கின்றன.

ஒட்டகச்சிவிங்கி

மிக நீளமான கால்கள் மற்றும் கழுத்து கொண்ட ஒட்டகச்சிவிங்கி போன்ற உடல் தோற்றம் கொண்டது ஒகாபி. இந்த வகை விலங்குகள் ஆப்பிரிக்க காடுகளில் மிக அதிகமாக காணப்படும். இவற்றின் நாக்கும் மிக நீளமாக இருக்கும். தங்கள் உடலை சுத்தம் செய்யும் வகையில் இவற்றின் நாக்கு நீளமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தங்கள் காதுகளுக்குள் நாக்கை நுழைத்தும் இவை சுத்தம் செய்கின்றன. அந்த அளவுக்கு இவற்றின் நாக்கு நீளமாக உள்ளது.

மேலும் செய்திகள்