ஆத்தூர் அருகே மனைவியின் வளைகாப்புக்கு மறுநாள் விபத்தில் பட்டறை தொழிலாளி பலி மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து பரிதாபம்
ஆத்தூர் அருகே மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மறுநாள் மோட்டார்சைக்கிளில் சென்றபோது பட்டறை தொழிலாளி கீழே விழுந்து இறந்தார்.;
ஆத்தூர்,
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லிகை ஊராட்சி ஜெனிதா நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சபரிநாதன் (வயது 25). இவர் வெல்டிங் பட்டறையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த சுவேதா (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சுவேதா கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 10–ந்தேதி சுவேதாவிற்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. பின்னர் சுவேதா அவரது பெற்றோர் வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுவேதாவை பார்க்க ஒரு மோட்டார்சைக்கிளில் சபரிநாதன் ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது நாய் ஒன்று குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. அதன் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டபோது சபரிநாதன் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சபரிநாதன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சபரிநாதன் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலைப் பார்த்து கர்ப்பிணி மனைவி சுவேதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.