மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு

மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-04-12 22:15 GMT

மோகனுர், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நாமக்கல் ஏ.எஸ். பேட்டையை சேர்ந்த என்.கே.எஸ்.சக்திவேல் என்பவர் பிர‌ஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் மோகனூர் வாரச்சந்தை பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த துண்டு பிரசுரத்தை ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நபரை சக்திவேலின் ஆதரவாளர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் தனது உறவினர்கள் சிலரை அழைத்து வந்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சிலர் காயம் அடைந்தனர். இது குறித்து சுயேச்சை வேட்பாளர் சத்திவேல் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஒருவந்தூரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் பிரபாகரன் (வயது 50), ரஞ்சித் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதே போல மற்றொரு தரப்பை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல், ராதாமணாளன், சசிகுமார், செந்தில், கதிரேசன் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு தரப்பு புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்