ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கொளுத்தும் வெயிலிலும் வரிசையில் நின்று வாக்களித்த பொதுமக்கள்

ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கொளுத்தும் வெயிலிலும் வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.;

Update:2019-04-19 05:00 IST
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில், நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தலையொட்டி ஓசூரில், 189 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் காலை முதலே ஆண், பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். ஓசூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தனது கணவரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டியுடன் ஓசூர்-பஸ்தி பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில், நீண்ட வரிசையில் காத்திருந்து காலை 7.40 மணியளவில் வாக்குப்பதிவு செய்தார்.

தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா, ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் முதல் நபராக காலை 7.20 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். இந்த வாக்குச்சாவடிகளில், வாக்கு எந்திரத்தில் தொழில்நுட்ப பணிகள் காரணமாக 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். ஓசூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தபோதிலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள் காத்திருந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

அதேபோல், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதன்முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். ஓசூர் அருகே முகுலப்பள்ளி கிராமத்தில், ராமக்கா என்ற 100 வயது மூதாட்டி, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டார். அவரை குடும்பத்தினர் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர்.

ஓசூர் தொகுதியில், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் நிறைந்திருப்பதால், வேட்பாளர்கள் பெயர், சின்னம் மற்றும் அவர்களது விபரங்கள் இந்த 3 மொழிகளிலும் அச்சிடப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தன. அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா, மற்றும் இதர வேட்பாளர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரில் சென்று வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்டனர். ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் கல்யாண்சந்த் ஷமன், வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குப்பதிவு விபரங்களை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்