பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்தன அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.;

Update:2019-04-20 04:15 IST
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்தநிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காளிப்பேட்டை, மஞ்சவாடி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

விவசாய நிலங்களில் பயிரிட்டு இருந்த கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சூறைக்காற்றுக்கு பலத்த சேதமடைந்தது. மேலும் சாலையோரம் இருந்த புளிய மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்தது. விளம்பர போர்டுகள், தட்டிகள் காற்றில் பறந்தன. வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் கொளுத்தியது. சூறைக் காற்றினால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் வாழை மரங்களுக்கு பயிர் காப்பீடு கிடையாது. இதனால் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைமரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் தர்மபுரி மாவட்டத்தில் கடும் வெயில் அடித்தது. பகல் 12 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சூறைக்காற்று வீசியது. பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பி.துறிஞ்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்