கோடை வறட்சியால், நீலகிரி அணைகளின் நீர்மட்டம் குறைந்தது - மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
கோடை வறட்சியால் நீலகிரி அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதையொட்டி நீர்மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
மஞ்சூர்,
மலைப்பிரதேசமான நீலகிரி தனது பரப்பளவில் பெரும்பாலும் வனப்பகுதியை கொண்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் தொடங்கும். அதன்படி இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி, வனப்பகுதி வறட்சியை சந்தித்து உள்ளது. பகலில் கடும் வெயில் வாட்டி எடுப்பதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி ஆங்காங்கே பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
நீலகிரியில் மொத்தம் 12 நீர்மின் நிலையங்களில் இயங்கி வருகின்றன. இந்த நீர்மின் நிலையங்களில் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்ளிட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.
இதில் குந்தாவில் 60 மெகா வாட், கெத்தையில் 175 மெகா வாட், பரளியில் 180 மெகா வாட், பில்லூரில் 100 மெகா வாட், அவலாஞ்சியில் 40 மெகா வாட், காட்டுக்குப்பையில் 30 மெகா வாட், சிங்காராவில் 150 மெகா வாட், பைக்காராவில் 59.2 மெகா வாட், பைக்காரா மைக்ரோவில் 2 மெகா வாட், முக்குருத்தி மைக்ரோவில் 0.70 மெகா வாட், மாயாரில் 36 மெகா வாட், மரவகண்டியில் 0.75 மெகா வாட் என மொத்தம் 833.65 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீர்மின் நிலையங்களில் இருந்து மின்சார உற்பத்திக்கு பிறகு வெளியேற்றப்படும் நீரானது நீலகிரி மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் பவானி சாகர் பாசன விவசாயிகளின் தேவையையும் நிறைவு செய்கிறது.
ஆனால் தற்போது வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், ஆறுகளில் நீரோட்டம் இல்லை. இதனால் அணைகளுக்கு நீர் வரத்தும் இல்லை. ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அணைகளில் நீர்மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக நீலகிரியின் பெரிய அணையான அப்பர் பவானியில் 61 அடிக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 210 அடி ஆகும்.