கூடலூரில், கார் மோதி டீக்கடைக்காரர் படுகாயம்

கூடலூரில் கார் மோதி டீக்கடைக்காரர் படுகாயம் அடைந்தார்.;

Update:2019-04-20 04:15 IST
கூடலூர்,

கேரளா- கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் சந்திப்பில் கூடலூர் நகரம் உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சரக்கு லாரிகள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரமாக கூடலூர் உள்ளது. பொதுத்தேர்வுகள் நடைபெற்று வந்ததால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது கார்களில் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இதற்கு ஏற்ப கோடை மழை பெய்து நீலகிரியில் குளு, குளு சீசனும் தொடங்கி உள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கூடலூரில் சுற்றுலா வாகனங்களும் அதிகளவு இயக்கப்படுகிறது. கடந்த 1 வாரமாக ஊட்டியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் கார்கள் கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வந்தவுடன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. இதனால் சாலையோரம் மற்றும் நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பீதியுடன் செல்கின்றனர்.

நேற்று முன்தினம் கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று நடைபாதையில் புகுந்தது. இதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். நேற்று மதியம் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து வந்த கார் ஒன்று பழைய பஸ் நிலையம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடைபாதை மீது ஏறியது. அப்போது நடைபாதையில் நடந்து சென்ற டீக்கடைக்காரரான முத்து(வயது 40) என்பவர் மீது கார் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து நடந்ததால் அதன்பின்னர் வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் ராஜகோபாலபுரம் வரை சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் திருப்பி செல்ல வழி இல்லாமல் நடுவழியில் நின்றது.

மேலும் மதியம் என்பதால் போலீசார் உணவு இடைவேளைக்கு சென்று விட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த டீக்கடைக்காரரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கோடை சீசன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் தொடர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. கூடலூர் நகர நடைபாதைகளின் கரையோரம் தடுப்புகள் பாதுகாப்பாக அமைக்கப்படவில்லை. இதனால் எந்த நேரத்திலும் கட்டுப்பாட்டை இழந்து வரும் வாகனங்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விபத்துகள் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்