மாநில அரசு பள்ளிகளில் புதுக்கோட்டை 15-வது இடம் முதன்மை கல்வி அதிகாரி வனஜா பேட்டி

மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 15-வது இடத்தில் உள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி வனஜா கூறினார்.;

Update:2019-04-20 03:45 IST
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை மொத்தம் 167 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 211 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 18 ஆயிரத்து 191 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 85.71 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.51 ஆகும். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.01 ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.48 சதவீதம் அதிகம் ஆகும்.

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 82.81 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.40 சதவீதமும், அரசு பள்ளிகள் 87.43 சதவீதமும், பகுதி நேர அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.26 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள் 97.70 சதவீதமும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 96.90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 அரசு பள்ளிகள் உள்பட 49 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிட்டு பார்த்தால், புதுக்கோட்டை மாவட்டம் 15-வது இடத்தில் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்தவுடன் மாணவர்களின் தேர்ச்சி குறித்து பெற்றோர்களிடம் கூறப்பட்டது. தேர்ச்சியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறு மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்தி தேர்ச்சி சதவீதம் உயர காரணமாக இருந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்