திருப்புவனம் அருகே, கொத்தனார் சரமாரியாக வெட்டி கொலை - மகன் கண்முன்பே நடந்த பயங்கரம்
திருப்புவனம் அருகே மகனின் கண்முன்னே கொத்தனார் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.;
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ்சரகத்தை சேர்ந்தது செங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தற்போது மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மேலும் பழைய கார்களை வாங்கி விற்பதையும் செய்து வந்தாராம்.
இந்தநிலையில் தனது சொந்த ஊரான செங்குளத்திற்கு ஓட்டுப்போட தனது மகன் ராஜவேலுடன் (5) மோட்டார் சைக்கிளில் வந்தார். ஓட்டுப்பதிவு செய்துவிட்டு தனது தந்தை வீட்டிற்கு ஆறுமுகம் சென்றார். அங்கு சிறிது நேரம் தங்கியிருந்த பின்பு, இரவு மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்றார்.
நெடுங்குளம்-மதுரை சாலை, கருங்காலக்குடி கண்மாய் அருகில் உள்ள கழுங்கு பாலத்தில் வந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். தனது கண்முன்னே தந்தை வெட்டப்படுவது கண்டு சிறுவன் செய்வதறியாது நின்றான். பின்பு மர்ம நபர்கள் சிறுவன் ராஜவேலுவை கீழே தள்ளி விட்டு சென்றதில் சிறுவன் தலையில் பலத்த காயமடைந்தான். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார். இந்தநிலையில் சிறுவன் ரோட்டில் நின்று அழுது கொண்டிருந்ததை பார்த்த, அந்த வழியாக சென்றவர்கள் சிறுவன் கூறிய விவரங்களை கேட்டு, செங்குளத்தில் உள்ள ஆறுமுகத்தின் தந்தை ராஜசேகருக்கு தெரிவித்தனர். அவர் சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை காரணம் குறித்தும், கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்கள் பற்றியும் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன ஆறுமுகம் தனியார் வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.