பாலக்கோட்டில் சர்க்கரை ஆலையின் மேற்கூரையில் இருந்து விழுந்து சமையல் உதவியாளர் சாவு
பாலக்கோட்டில் சர்க்கரை ஆலையின் மேற்கூரையில் இருந்து விழுந்து சமையல் உதவியாளர் பரிதாபமாக இறந்தார்.;
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திம்மம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது55). இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கேண்டினில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். சுந்தரம் மற்றும் பாலக்கோடு பகுதியை சேர்ந்த மாணிக்கம், ராமகிருஷ்ணன் ஆகியோர் சர்க்கரை ஆலை 3–ம் எண் கிடங்கு பகுதியின் மேற்கூரையில் மழைநீர் தேங்காமல் இருக்க அங்கு இருந்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அங்கு மேற்கூரையின் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக மேற்கூரை உடைந்து சுமார் 35 அடி உயரத்தில் இருந்து சுந்தரம் தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வேலை செய்து கொண்டு இருந்த மாணிக்கம், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு முதலுதவி செய்து கொண்டு மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் இறந்த சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.