நாடுகாணி தாவரவியல் பூங்காவில் வனப்பகுதிக்கு தீ வைத்த தொழிலாளி கைது

நாடுகாணி தாவரவியல் பூங்காவில் வனப்பகுதிக்கு தீ வைத்த தொழிலாளியை வனத்துறையினர் கைது செய்தனர்.;

Update:2019-04-21 04:00 IST
கூடலூர்,

கூடலூர் வன கோட்டத்தில் 6 வனச்சரகங்கள் உள்ளன. இதில் நாடுகாணி தாவரவியல் பூங்கா வனப்பகுதி சுமார் 243 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு அரிய வகை தாவரங்களின் திசு ஆராய்ச்சி மையம், வனவிலங்குகளின் உடற்பாகங்கள், சிறு உயிரினங்கள், வனப்பகுதியில் கிடைக்கும் அரிய வகை கற்களை கொண்ட கண்காட்சியகம், ஆர்க்கிட்டோரியம், இந்தியா முழுவதும் வளரும் பெரணி செடிகளை கொண்டு வந்து பராமரிக்கும் இல்லம் ஆகியவை உள்ளது.

இதனால் வன ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு சிறந்த கல்வி சுற்றுலா மையமாக இது திகழ்கிறது. கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் தாவரவியல் மைய பூங்கா வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. பின்னர் போதிய நிதி இல்லாததால் தாவரவியல் பூங்கா பராமரிக்க முடியாமல் மூடப்பட்டது. இதனை மேம்படுத்தி சுற்றுலா பயணிகள் காண அனுமதி அளிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதையொட்டி சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் தாவரவியல் மைய பூங்கா வனப்பகுதியை கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் மையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாவரவியல் மைய பூங்கா வனப்பகுதியில் அரிய வகை மூலிகை மற்றும் தாவரங்கள் உள்ளன. மேலும் வனவிலங்குகள் மற்றும் சிறு உயிரினங்களின் புகலிடமாக விளங்குகிறது.

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் தாவரவியல் மைய பூங்கா வனப்பகுதியை காணும் வகையில் காட்சிமுனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் காட்டுயானைகள் கூட்டமாக நிற்பதையும் காணலாம். இந்த நிலையில் வறட்சியான காலங்களில் தாவரவியல் மைய பூங்கா வனப்பகுதிக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் வனப்பகுதியில் தீ பரவுவதால் வனவிலங்குகள் இடம் பெயருகிறது. ஏராளமான சிறு உயிரினங்கள் தீயில் கருகி விடுகிறது. மேலும் அரிய வகை தாவரங்களும் அழிந்து வருகிறது.

எனவே வனப்பகுதிக்கு தீ வைக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதை பொருட்படுத்தாமல் சமூக விரோதிகள் தீ வைக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை தாவரவியல் மைய வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேவாலா வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல கட்டங்களாக போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவு எரிந்து நாசமானது. வனப்பகுதிக்கு தீ வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது நாடுகாணி பகுதியை சேர்ந்த மதுரை வீரன்(வயது 37) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தாவரவியல் மைய வனப்பகுதிக்கு அவர் தீ வைத்தது தெரிய வந்தது. இதையொட்டி தேவாலா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வனச்சரகர் சரவணன் கூறியதாவது:-

வனப்பகுதிக்கு தீ வைப்பது சட்டப்படி குற்றம். தாவரவியல் வனப்பகுதிக்கு தீ வைத்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் பழைய வழக்கில் கைதான தொழிலாளி மதுரை வீரன் தீ வைத்து விட்டு தலைமறைவானது தெரிய வந்தது. அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்