தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலத்தில் படகுகள், வலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்

மீன்பிடி தடைகாலத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் படகுகள், வலைகள் சீரமைப்பு பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-04-29 23:00 GMT
தஞ்சாவூர்,

கடலில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில் மீன் முட்டைகள், குஞ்சுகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு வசதியாக 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்வதில்லை.

மற்ற மீனவர்கள் கடலில் இருந்து சிறிது தூரம் வரை சென்று நண்டு, மீன் போன்றவற்றை பிடித்து வருவது வழக்கம். தற்போது மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. வழக்கமாக மீன்பிடி தடை காலங்களில் மீனவர்கள் தங்களின் படகுகள், வலைகளை சீர் செய்து வழக்கம்.

விசைப்படகு ரூ.8 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆகும். அதே போல் வலைகளும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விலை உடையது. தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் மீனவர்கள் தங்களின் படகுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். படகுகளுக்கு வர்ணம் பூசுவது, படகில் உள்ள என்ஜினை கழற்றி அதனை சரி செய்வது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

படகுகளை சீரமைக்க மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் வரையும், வலைகளை சீரமைக்க ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் செலவு ஆகும். இந்த பணிகளை மேற்கொள்ள 15 நாட்கள் வரை ஆகும். தஞ்சை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இதில் அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் தற்போது படகுகளை சீரமைத்து வருகிறார்கள்.

மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. முன்பு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அது உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது போதாது என்றும் மீன்பிடி தடைகால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றால் 24 மணி நேரத்தில் கரை திரும்புவார்கள். இதில் வாவல், கொடுவா போன்ற விலை உயர்ந்த மீன்கள் தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டாலும் அதிக அளவில் வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் படகுகள், வலைகளை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த மீன்பிடி தடைகாலத்தில் அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் காரணமாக மீனவர்கள், படகு, வலைகளை இழந்து பெரும் சேதத்திற்கு ஆளாகினர். அதில் இருந்து இன்னும் மீண்டுவரவில்லை. கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளை சீரமைக்கவே மீனவர்கள் கடன் வாங்கி தான் செலவு செய்தனர். தற்போது மீன்பிடி தடைகாலத்தில் படகுகளை பழுது பார்க்கவும் பெரும்பாலானோர் கடன் தான் வாங்கி உள்ளனர். எனவே அரசு மீனவர்களுக்கு தடைகாலத்தில் வழங்கும் நிவாரணத்தை ரூ.12 ஆயிரத்துக்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும்”என்றனர்.

மேலும் செய்திகள்