மந்திரி பதவியில் இருந்து நீக்கினால் நானும் அதிருப்தி அடைவேன் : ஜமீர் அகமதுகான் சொல்கிறார்
ரமேஷ் ஜார்கிகோளி காங்கிரசில் இருந்து விலகமாட்டார் என்றும், மந்திரி பதவியில் இருந்து நீக்கினால் நானும் அதிருப்தி அடைவேன் என்றும் ஜமீர் அகமதுகான் தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு,
பெங்களூருவில் மந்திரி ஜமீர் அகமதுகான் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று பா.ஜனதாவினர் கனவு காண்கின்றனர். அவர்களது கனவு பலிக்காது. கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே, ஆட்சி கவிழ்ந்து விடும் என்று தான் பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். எந்த விதமான பிரச்சினையும் இன்றி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
சித்தராமையா தான் எங்கள் தலைவர். அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆவது உறுதி. கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி தான் இருப்பார். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக சித்தராமையா வருவார். மாநில மக்களும் சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இதில், என்ன தவறு இருக்கிறது. சித்தராமையா ஓரிரு நாட்களில் முதல்-மந்திரி ஆவார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கூறவில்லை.
மண்டியா தொகுதியில் தனது மகன் நிகிலை வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்பாக, அந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தி இருக்கலாம். அதனை செய்யாமல் முதல்-மந்திரி குமாரசாமி தவறு செய்துவிட்டார். அதனால் தான் செலுவராயசாமி உள்ளிட்ட மண்டியா காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி சென்றதால் செலுவராயசாமி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் நாடாளுமன்ற தேர்தலுக்்கு முன்பாக குமாரசாமி கலந்து பேசாமல் இருந்துவிட்டார்.
ரமேஷ் ஜார்கிகோளி உண்மையான காங்கிரஸ் தொண்டர். மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் காங்கிரஸ் தலைவர்கள் மீதும், கூட்டணி அரசு மீதும் ரமேஷ் ஜார்கிகோளி அதிருப்தியில் உள்ளார். மந்திரி பதவியில் இருந்து நீக்கினால் எல்லோருக்கும் அதிருப்தி ஏற்படுவது சகஜம் தான். சகித்து கொள்ளவும் முடியாது. மந்திரி பதவியில் இருந்து என்னை நீக்கினாலும் நானும் அதிருப்தி அடைவேன். ரமேஷ் ஜார்கிகோளி காங்கிரசில் இருந்து விலக மாட்டார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு மந்திரி ஜமீர் அகமதுகான் கூறினார்.