விழுப்புரம் அருகே, திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவிக்கு கொலை மிரட்டல் - போக்சோ சட்டத்தில் அரசு ஊழியர் கைது

விழுப்புரம் அருகே திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு ஊழியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;

Update:2019-05-03 04:00 IST
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள நரையூர் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவி, விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்போது 8-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இவரை திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் வளவனூர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த அய்யனார் மகன் சக்திவேல் (23) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த மாணவி, வளவனூர் பகுதியில் உள்ள தட்டச்சு பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த சக்திவேல், அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து மாணவி, தனது வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் சக்திவேல் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது சித்தப்பா அழகுவேல் (40) என்பவர் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல் தரப்பினர், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவியின் பெற்றோர் மற்றும் சித்தப்பா அழகுவேல் ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து அழகுவேல் கொடுத்த புகாரின்பேரில், வளவனூர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த விஜி, ஜெயக்குமார், விஸ்வா, கார்த்தி, அப்பு, சரத்குமார், கபிலன், கதிரேசன், வேலு, ஜெகன், சரண் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்