ரெயில் என்ஜின் டிரைவரை கல்லால் தாக்கிய 3 பேர் கைது பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்

பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில், எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவரை கல்லால் தாக்கிய 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2019-05-03 04:15 IST
திருவொற்றியூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 48). எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள இருட்டான பகுதியில் மறைந்து இருந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி கிருஷ்ணனிடம் பணம் கேட்டனர். இதனால் பயந்துபோன அவர், கூச்சலிட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் 3 பேரும் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து கிருஷ்ணனின் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூரைச் சேர்ந்த தேவராஜ்(20), விஜய்(21), ராஜேஷ்(29) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்