ஓசூரில் வெவ்வேறு விபத்து: தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி

ஓசூரில் வெவ்வேறு சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.;

Update:2019-05-04 04:00 IST
ஓசூர், 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திம்மம்புதூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ஏழுமலை (வயது 24). கார் டிரைவர். சம்பவத்தன்று இவர் காரில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குமுதேப்பள்ளி பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஏழுமலை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பலியான ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் ஜூஜூவாடி பி.டி.ஆர். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் பிரவீன் (25). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் டிப்பர் லாரியை ஓட்டி சென்ற டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்து லாரியை நிறுத்தினார்.

அப்போது பிரவீன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதியது. இதில் படுகாயம் அட்ந்தை பிரவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்