கடன் தொல்லை காரணமாக குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதி

கடன் தொல்லை காரணமாக குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியை பழனி போலீசார் மீட்டனர்.;

Update:2019-05-04 04:30 IST
பழனி,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 31). அவருடைய மனைவி அஸ்வினிராஜ் (27). இவர்களுடைய மகன் ஆர்த்தா மவுலிநாத் (2). ஸ்ரீநாத், கொல்லம் பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, ஸ்ரீநாத் பல இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் ஸ்ரீநாத் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு ஸ்ரீநாத் தனது மனைவி, குழந்தையுடன் பழனிக்கு வந்தார்.

இதையடுத்து அவர்கள், அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கினர். பின்னர் மகனுக்கு முடிகாணிக்கை செலுத்திய பின்பு முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அறைக்கு திரும்பினர். எனினும் கடன் தொல்லையால் மனமுடைந்த ஸ்ரீநாத்-அஸ்வினிராஜ் இருவரும் குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கொல்லத்தில் உள்ள தனது தம்பி ஜெயனுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அஸ்வினிராஜ், குடும்பத்துடன் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு போனை அணைத்து வைத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சம்பவம் குறித்து கொல்லம் மாவட்ட போலீஸ் துறையிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் கொல்லம் போலீசார், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஸ்ரீநாத் மற்றும் அவரின் குடும்பத்தினர் புகைப்படம் ‘வாட்ஸ் அப்பில்’ அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 5 பிரிவுகளாக போலீசார் பழனி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் அவர்கள் திருஆவினன்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் அறைக்கு சென்ற போலீசார் அங்கிருந்த ஸ்ரீநாத் குடும்பத்தை பத்திரமாக மீட்டனர். மேலும் தற்கொலை செய்வதற்காக அறையில் வாங்கி வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) கைப்பற்றினர்.

இதையடுத்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் பழனிக்கு வந்தனர். பின்னர் அந்த தம்பதிக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி, அவர்களை உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்யப்போவதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயல்பட்டு தம்பதியை மீட்ட பழனி போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

மேலும் செய்திகள்