நாகர்கோவிலில், ரெயில் மோதியதில் உடல் சிதறி பெண் சாவு - தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
நாகர்கோவிலில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரெயில் மோதியதில் உடல் சிதறி பலியானார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;
நாகர்கோவில்,
நாகர்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மனைவி பார்வதி (வயது 46), கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பார்வதி தினமும் காலையில் வேலைக்கு செல்லும் போது அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம்.
இதே போல நேற்று காலையும் வேலைக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பார்வதியின் உடல் பல துண்டுகளாக சிதறின.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துண்டு, துண்டாக கிடந்த உடலை சேகரித்தனர். அதைத் தொடர்ந்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் மோதியதில் பெண் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.