கார்வழி ஆற்றுப்பாளையம் அணையில் காவிரி ஆற்று உபரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பேன் செந்தில்பாலாஜி உறுதி

கார்வழி ஆற்றுப்பாளையம் அணையில் காவிரி ஆற்று உபரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பேன் என தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி கூறினார்.;

Update:2019-05-05 04:30 IST
க.பரமத்தி,

கார்வழி, அஞ்சூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றுப்பாளையம் அணை உள்ளது. இங்கு முன்பு நொய்யல் ஆற்று தண்ணீரை கொண்டு வந்து சேமித்து வைத்தனர். ஆனால் தற்போது சாயக்கழிவு தண்ணீர் வருவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மாசு அடைகிறது. நான் வெற்றி பெற்றால் உடனடியாக கொடுமுடி காவிரி ஆற்றில் உபரிநீர் வரும்போது பம்பிங் சிஸ்டம் மூலம் 7 கிலோ தொலைவில் உள்ள ஆற்றுப்பாளையம் அணையில் நீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறுகிறேன்.

இதன் மூலம் அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, அத்திப்பாளையம், குப்பம், புன்னம் மற்றும் கரூர் ஒன்றியத்தில் உள்ள 60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இதனால் க.பரமத்தி ஒன்றியம் செழிப்பான பகுதியாக மாறும். நிலம் இல்லாதவர்களுக்கு உடனடியாக 3 சென்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

விவசாயம் செய்ய நடவடிக்கை

இந்த பகுதியில் நொய்யல் நீர்த்தேக்கம் உள்ளது. மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வரும் உபரிநீரை சேமித்து இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதியில் கலைக் கல்லூரி, பஸ் போக்குவரத்து, தார் சாலை, சிமெண்ட் சாலை அமைத்து அரவக்குறிச்சி தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்கு சேகரிப்பின்போது, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, தி.மு.க. நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் கே.கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்