ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் கொள்ளை சம்பவம் எதிரொலி: இரவு நேரங்களில் ரெயில்வே போலீசாருக்கு ரோந்து பணி அதிகரிப்பு டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவு
ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிப்பது அதிகரித்து வருவதன் எதிரொலியாக இரவு நேரங்களில் ரெயில்வே போலீசாருக்கு ரோந்து பணியை அதிகரித்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.;
திருச்சி,
சேலம் அருகே மாவேலிப்பாளையம் மற்றும் மகுடஞ்சாவடி பகுதிகளில் ரெயில்வே தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக ரெயில்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த இடத்தில் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மெதுவாக சென்ற போது 10 பெண்களிடம் 30 பவுன் நகைகளை மர்மகும்பல் பறித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வட மாநில கும்பல் மீண்டும் தங்களது கைவரிசையை காட்ட தமிழகத்திற்குள் புகுந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுதுவதும் ரெயில்வே போலீசார் இரவு நேரங்களில் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடும்படி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று முதல் இரவு ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட தலா 2 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் ரெயில்கள் மெதுவாக செல்லும் இடம் மற்றும் அடிக்கடி சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெறும் இடத்தை ரெயில்வே போலீசார் கணக்கிட்டு அந்த இடங்களில் ரோந்து பணியை அதிகப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே யார்டு பகுதி, முடுக்குப்பட்டி, தென்னூர் ஓ பாலம் ஆகிய இடங்களில் நேற்று முதல் தலா 2 ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்கள் அந்த இடங்களில் மெதுவாக செல்லும் போது மர்மநபர்கள் யாரேனும் திடீரென வந்து பயணிகளிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனரா? என கண்காணிக்கின்ற னர். மேலும் சேலத்தில் பயணிகளிடம் கொள்ளையடித்த கும்பல் திருச்சி பகுதிக்கு வந்துள்ளனரா? என குற்றப்பிரிவு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.