புதுக்கோட்டை வங்கியில் 13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கில் பலருக்கு தொடர்பு? போலீசார் விசாரணை தீவிரம்

புதுக்கோட்டையில் உள்ள வங்கியில் 13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2019-05-06 03:45 IST
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து தனது காரில் வெளியே சென்ற மாரிமுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனக்கூறி, அவரது மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாரிமுத்து திடீரென மாயமானதால், அவர் வங்கியில் இருந்து நகைகளை எடுத்துச்சென்று இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் சந்தேகப்பட்டு, வங்கியில் இருந்த நகைகளை சரிபார்த்தனர். இந்நிலையில் மாரிமுத்து மணமேல்குடி கோடியக்கரை கடலில் பிணமாக மிதந்தார். இதனால் இந்த வழக்கில் மேலும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வங்கி நிர்வாகத்தின் சார்பில், 13¾ கிலோ தங்க நகைகளை காணவில்லை என்றும், அவை மாயமானதில் மாரிமுத்துவுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் பலரை தங்களின் விசாரணைக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த வழக்கில் மாரிமுத்துவை யார் கொலை செய்தனர் என்று கண்டுபிடிக்கும் போது தான், வங்கி கொள்ளையில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது?, எப்படி கொள்ளை நடத்திருக்கும் என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்