வடமாநில பக்தரிடம் ரூ.1 லட்சம் பணம் திருடிய 2 பேர் கைது ராமேசுவரத்தில் சுற்றித்திரிந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில பக்தர்களிடம் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.;

Update:2019-05-07 04:45 IST

ராமேசுவரம்,

பீகார் மாநிலத்தில் இருந்து கடந்த வாரம் அஜீத்குமார் குப்தா என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார். அதற்கு முன்பாக ராமேசுவரம் கோவிலுக்கு சென்று வரலாம் என்று எண்ணிய அவர்கள் 3 பேரும் கடந்த 29–ந்தேதி ராமேசுவரம் வந்தனர். பின்னர் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக சென்ற அவர்கள் கடற்கரையில் தங்களது பொருட்களை ஒரு பேக்கில் வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள் அருகில் வந்தனர்.

அதில் ஒருவர் ஒரு பத்து ரூபாய் நோட்டை கீழே போட்டுவிட்டு பணம் கிடப்பதாக அந்த பெண்ணிடம் கூறி கவனத்தை திசை திருப்பி உள்ளார். இதையடுத்து அந்த பெண் பத்து ரூபாயை எடுக்க முயன்றபோது அருகில் நின்ற மற்றொரு மர்மநபர் பேக்கில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டான். அந்த பையில் ரூ.1 லட்சம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டார். அதனை தொடர்ந்து அஜீத்குமார் குப்தா இதுகுறித்து கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ரத்தினவேல், ஜான்பிரிட்டோ ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சங்குமால் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் திருச்சி திருவெரும்பூர் காந்திநகரை சேர்ந்த மாரிமுத்து(வயது 65), சூரியநாராயணன்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அக்னி தீர்த்த கடற்கரையில் வடமாநில பக்தர்களின் பணப்பையை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விசாரணையில் இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ராமேசுவரம், திருச்செந்தூர், திருச்சி, வேளாங்கண்ணி போன்ற கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு சென்று திருடுவதை தொழிலாக கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் செய்திகள்