கோடை விடுமுறையால் கூட்ட நெரிசல்: எக்ஸ்பிரஸ் ரெயிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் பயணிகள் அவதி

கோடை விடுமுறையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசல் உள்ள நிலையில் எக்ஸ்பிரஸ் ரெயிகளில் தண்ணீர் பற்றாக்குறை, சுகாதார குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2019-05-06 22:30 GMT

மதுரை,

கோடை விடுமுறையை தொடர்ந்து அனைத்து ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தென்னக ரெயில்வேயில், இந்த கோடை விடுமுறைக்கு சிறப்பு ரெயில்கள் அதிக அளவு இயக்கப்படவில்லை. குறிப்பாக தண்டவாள பராமரிப்பு பணி என்ற பெயரில் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்படுகின்றன. இதனால், குழந்தைகளுடன் வெளியூர் செல்லும் பெண் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல, தென்மாவட்டங்களில் இருந்து மும்பை, சென்னை போன்ற நகரங்களில் தொழில்நிமித்தமாக குடியிருந்து வரும் பயணிகள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதில், மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கத்தை விட அதிகமான அளவு பயணிகளின் கூட்ட நெரிசலால் நிரம்பி வழிகிறது. மும்பையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு ஒரு ரெயிலும், தாதர் ரெயில்நிலையத்தில் இருந்து மதுரை வழியாக நெல்லைக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது. இதில், மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16339) வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது. ஆனால், இந்த ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூருவில் இருந்து சேலம் வரை சேலம் கோட்ட ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்களும், சேலத்தில் இருந்து நாகர்கோவில் வரை மதுரை கோட்ட ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, டிக்கெட் பரிசோதகர்கள் வராததால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளும், பகுதி இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணிகளும் இருக்கை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதேபோல, குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இது குறித்த புகார்களுக்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. 3,2–அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வருவதில்லை. இதனால், கழிப்பறைகள் கடும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் ரெயிலில் சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஏற்கனவே, மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் பற்றாக்குறையால், அடிக்கடி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தும் சம்பவங்கள் நடப்பதுண்டு. தற்போது டிக்கெட் பரிசோதகர்கள் இல்லாததால் புகார் தெரிவிக்கவும் வழியில்லாமல் பயணிகள் தவிக்கின்றனர்.

இதேபோன்று தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. எனவே இந்த கோடை விடுமுறையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்