புதுக்கோட்டையில் ஓட்டல் கழிவறையில் பிணமாக கிடந்த வாலிபர் போலீசார் விசாரணை

புதுக்கோட்டையில் ஓட்டல் கழிவறையில் வாலிபர் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2019-05-07 04:15 IST
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்தவர் யுவராஜ்(வயது 25). இவர் நேற்று முன்தினம் காலை புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவருடைய நண்பர் காலீஸ்வரன், யுவராஜுக்கு காலை உணவு வாங்கி கொடுத்து சென்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலீஸ்வரன், ஓட்டலுக்கு வந்தார். அவர், யுவராஜ் தங்கியிருந்த அறைக்கதவை தட்டியபோது, கதவு திறக்கப்படவில்லை. இது பற்றி ஓட்டல் ஊழியர்களிடம், காலீஸ்வரன் கூறினார். இதையடுத்து வேறு சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது, யுவராஜ் கழிவறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, யுவராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்