சம்பள நிலுவைத் தொகையை வழங்கக்கோரி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

சம்பள நிலுவைத்தொகையை வழங்கக்கோரி திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.;

Update:2019-05-09 03:30 IST
திருச்சி, 

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் 360 துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சம்பள நிலுவைத்தொகையை காலதாமதம் செய்யாமல் மாதந்தோறும் 1-ந் தேதியே வழங்க வேண்டும். நியாயமாக வழங்கப்பட வேண்டிய சட்டக்கூலி ரூ.360-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். கூலி வழங்காத ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காலை அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் மணிமாறன், சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட தலைவர் ரெங்கராஜன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயன் ஆகியோர் பேசினர். இதில் துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் விமலா, ராமசாமி, ரவி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் கோட்ட அலுவலக நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் குறித்து ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து துப்புரவு தொழிலாளர்களுக்கான சம்பள நிலுவைத்தொகை காசோலை மூலம் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்