சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது பாலியல் தொல்லை கொடுத்த நண்பரும் சிக்கினார்

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது நண்பர் ஆகியோரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update:2019-05-10 03:45 IST
திரு.வி.க.நகர்,

சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த மாதம் 14-ந்தேதி மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் தங்கள் மகள் மாயமானதாக திரு.வி.க.நகர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இதற்கிடையில் அந்த சிறுமி, அரக்கோணத்தில் இருப்பதாக தெரிந்தது. இதையடுத்து அரக்கோணம் விரைந்த போலீசார், அங்கிருந்த சிறுமியை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், சென்னை தியாகராயநகரை சேர்ந்த பெருமாள்(வயது 20) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்ததும், அரக்கோணத்தில் தங்கி இருந்தபோது பெருமாளின் நண்பரான கொளத்தூரை அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்த அரவிந்த்(25) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிந்தது.

இதுகுறித்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள், அவருடைய நண்பர் அரவிந்த் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்