வெவ்வேறு விபத்துகளில் வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.;

Update:2019-05-10 04:15 IST
பர்கூர், 

அசாம் மாநிலம் சேக்பூர் பகுதியை சேர்ந்தவர் சக்ரா குவாலா. இவரது மகன் பிஸ்வாஜிதா குவாலா (வயது 26). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதேவி பகுதியில் உள்ள ஒரு ஆலையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பிஸ்வாஜிதா குவாலா தனது சைக்கிளில் திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் ரோட்டில் ஜெகதேவி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவருடன் வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த மனோகர் சிங் மகன் ராஜ்பால் சிங்(26) என்பவர், தனது மோட்டார்சைக்கிளில் அவரது நண்பர், சுல்தான் சிங் மகன் லோகேஷ்(25) என்பவரை ஏற்றிக்கொண்டு அதே பகுதியில் சென்று கொண்டிருந்தார். இதையொட்டி ராஜ்பால் சிங் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் பிஸ்வாஜிதா குவாலா மீது மோதியது.

இந்த விபத்தில் பிஸ்வாஜிதா குவாலா பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லோகேஷ் காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே போல் அஞ்செட்டி அருகே உள்ள கரகூரை சேர்ந்தவர் மல்லப்பா (27). சம்பவத்தன்று இவரும், தளி அருகே உள்ள ஜீகூரை சேர்ந்த சேத்தன்குமார் (16) என்பவரும் மோட்டார்சைக்கிளில் தளி - ஆனேக்கல் சாலையில் பட்னூர் பிரிவு சாலை அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக முன்னால் சென்ற லாரி திடீரென்று பிரேக் பிடித்து நின்றது.

இதன் காரணமாக மல்லப்பா சென்ற மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் மல்லப்பா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சேத்தன்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்