நகை மோசடி வழக்கில் கைதுக்கு பயந்து அரசு ஆஸ்பத்திரி 2-வது மாடியில் இருந்து கீழே குதித்த வாலிபர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை
நகை மோசடி வழக்கில் கைது நடவடிக்கைக்கு பயந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி 2-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
நெல்லை,
நகை மோசடி வழக்கில் கைது நடவடிக்கைக்கு பயந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி 2-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நகை மோசடி வழக்கு
நெல்லை வண்ணார்பேட்டை வெற்றி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் பாண்டிச்செல்வம் (வயது 26). இவர், நெல்லை சி.என்.கிராமத்தை சேர்ந்த சிவஞானம் மனைவி சியாமளா தேவி (வயது 40) என்பவரிடம் 5 பவுன் நகையை வாங்கி அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.
அந்த நகையை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து சியாமளா தேவி நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி பாண்டிச்செல்வம், சபீர்அகமது ஆகிய 2 பேர் மீது நகை மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மாடியில் இருந்து குதித்தார்
இந்த நிலையில் பாண்டிச்செல்வம் தனது உடல்நிலை சரியில்லை என கூறி கடந்த 5-ந் தேதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் டாக்டர்கள், பாண்டிச்செல்வத்தை சிகிச்சை முடிந்து விட்டது வீட்டுக்கு செல்லலாம் என கூறினர். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே சென்றால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என பாண்டிச்செல்வம் பயந்ததாக கூறப்படுகிறது. நேற்று பகல் 2 மணியளவில் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக அவர் திடீரென கீழே குதித்தார்.
தற்கொலை முயற்சி
இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு இருந்த போலீசார் அவரை மீட்டு மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை மோசடி வழக்கில் கைது நடவடிக்கைக்கு பயந்து வாலிபர் அரசு ஆஸ்பத்திரி 2-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.