திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு யானையை கொண்டு சென்ற உரிமையாளர் மீது வழக்கு உரிய அனுமதி பெறாததால் வனத்துறையினர் நடவடிக்கை
திருச்சியில் இருந்து உரிய அனுமதி பெறாமல் திருவண்ணாமலைக்கு யானையை கொண்டு சென்ற உரிமையாளர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.;
திருச்சி,
திருச்சி உறையூர் குழுமணிரோட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் யானையை வளர்த்து அவ்வப்போது திருமண நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் யானைகளை வளர்த்து வரும் தனிநபர்கள் ஏதாவது நிகழ்ச்சிக்காக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு யானைகளை கொண்டு செல்ல வேண்டுமானால் முறைப்படி சென்னையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் உரிய அனுமதி பெற வேண்டும்.
இந்தநிலையில் சேகர் தான் வளர்த்து வரும் 48 வயதுடைய பெண் யானை ராணியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அழைத்து சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் சேகரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கொட்டகையில் யானை இல்லை. உடனே இது குறித்து விசாரித்தபோது, யானையை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக அவர் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின்பேரில், உரிய அனுமதி பெறாமல் திருவண்ணாமலைக்கு யானையை கொண்டு சென்ற உரிமையாளர் சேகர் மீது தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் தனியார் யானைகள் வளர்ப்பு விதியின்படி 3 பிரிவுகளின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய முயற்சித்தனர்.
ஆனால் சேகர் திடீரென தலைமறைவாகி விட்டார். அவரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள். இதற்கிடையே திருவண்ணாமலைக்கு கொண்டு செல்லப்பட்ட யானையை நேற்று அதிகாலை திருச்சிக்கு கொண்டு வந்தனர்.