துணிக்கடை குடோனில் பயங்கர தீ 5 ஊழியர்கள் பரிதாப சாவு புனேயில் அதிகாலையில் துயரம்
புனேயில் நேற்று அதிகாலை ஒரு துணிக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
புனே,
புனேயில் நேற்று அதிகாலை ஒரு துணிக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துணிக்கடை
புனே உருளி தேவாச்சி பகுதியில் ராஜ்யோக் என்ற மொத்த சேலை வியாபார கடை உள்ளது. இந்த கடையின் தரைதளத்தில் துணி குடோன் உள்ளது. அங்கு தங்கியிருந்து வேலை செய்து வரும் ஊழியர்கள் 5 பேரும் வியாபாரம் முடிந்ததும் இரவு குடோனில் வந்து தூங்குவது வழக்கம். துணிக்கடை உரிமையாளர் குடோன் ஷட்டரை வெளிப்புறமாக பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விடுவார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவும் அவர் வழக்கம் போல குடோனை வெளியில் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். ஊழியர்கள் குடோனில் தூங்கினார்கள். பகல் முழுவதும் செய்த வேலை களைப்பில் அவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.
தீ விபத்து
இந்தநிலையில், அதிகாலை 4.30 மணியளவில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் குடோனில் இருந்த துணிகள் மளமளவென தீப்பிடித்து எரிந்தன. புகையினால் மூச்சுத்திணறல் மற்றும் வெப்ப தாக்கம் காரணமாக தூங்கி கொண்டிருந்த ஊழியர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் குடோன் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
குடோன் வெளிப்புறமாக பூட்டப்பட்டதால் உயிரை காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். தீயில் இருந்து தப்பிப்பதற்காக குடோனுக்குள் அங்கும், இங்குமாக ஓடினார்கள்.
இந்தநிலையில், குடோன் தீப்பிடித்து எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் விரைந்து வந்தனர்.
பொக்லைன் மூலம் சுவர் இடிப்பு
அப்போது, குடோனில் தீ கரும்புகையை கக்கியபடி கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. ஷட்டர் பூட்டப்பட்டு இருந்ததால் தீயணைப்பு படையினர் தீயை உடனடியாக அணைக்க வழி தெரியாமல் திண்டாடினர். இதையடுத்து அவர்கள் குடோன் சுவரை இடித்து தள்ள முடிவு செய்தனர். இதற்காக அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.
அந்த பொக்லைன் எந்திரம் மூலம் சுவரை உடைத்து கொண்டு உள்ளே சென்ற னர். அவர்கள் துரிதமாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
5 பேர் சாவு
அப்போது குடோனுக்குள் 4 ஊழியர்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனடியாக அவர்கள் 4 பேரையும் மீட்ட தீயணைப்பு துறையினர், அவர்களை சிகிச்சைக்காக சசூன் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர்கள் 4 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே குடோனில் எரிந்த தீயை தீயணைப்பு படையினர் 3 மணி நேரமாக போராடி அணைத்தனர். குடோனில் இருந்த துணிகள் அனைத்தும் எரிந்து நாசமாகின. தீ விபத்து பற்றி அறிந்ததும் குடோன் உரிமையாளர் பதறி அடித்துக் கொண்டு வந்தார்.
இதையடுத்து ஷட்டரை தீயணைப்பு படையினர் திறந்தனர்.
அப்போது தீயில் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
துயரம்
தகவல் அறிந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தர்மராம் (வயது 25), ராகேஷ் மேக்வால்(25), ராகேஷ் ரியாட்(22), சுரேஷ் சர்மா(25) மற்றும் லாத்தூரை சேர்ந்த தீரஜ் சன்டாக்(23) என்பது தெரியவந்தது.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளரிடமும் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துணி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 ஊழியர்கள் பலியான சம்பவம் புனேயில் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.