வீடுகளில் போலீசார் சோதனை; அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 10 பேர் கைது

தாயில்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2019-05-11 04:41 IST

தாயில்பட்டி,

சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டி அண்ணா காலனியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தார்கள். மேலும் அந்த பகுதியில் 20–க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் முனியசாமி (வயது45), மாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. குடோனில் பட்டாசு தயாரிப்பு காகிதங்கள் எரிந்து கிடந்தன. அவற்றை அகற்றும் பணியும் தீவிரமாக நடந்தது.

பட்டாசு தயாரித்த கூடத்தின் மேற்கூரை பறந்து சென்று அக்கம்பக்கத்து வீடுகளின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் பலர் மிகவும் ஏழ்மையானவர்கள். வீட்டில் இருந்த பொருட்களை இழந்து அனைவரும் தவிக்கின்றனர். வீடுகளையும் உடமைகளையும் இழந்தவர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் அப்பகுதியில் கலைஞர் காலனி,எஸ்.பி.எம். தெரு, கோட்டையூர், கோதை நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிமொழி தலைமையில் போலீசார் 30–க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது கருப்பசாமி (வயது45), சக்தி(26), முத்துப்பாண்டி(18), பழனியப்பன்(42),ராஜ்குமார்(23), ராமலிங்கம்(57), கலா(37),ரத்தினம்(35),ராமலட்சுமி(43), அந்தோணி(29),காளிஸ்(29),கருப்பசாமி(45), ஞானதுரை(27) ஆகியோரிடம் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்