பெரம்பலூர் மாவட்டத்தில் நுண்கலை பயிற்சி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு சான்றிதழ்
பெரம்பலூர் மாவட்டத்தில் நுண்கலை பயிற்சி பெற்ற சிறுவர்- சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறுவர்-சிறுமிகளுக்கு நுண்கலைகளில் கோடை கால இலவச சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இந்த முகாமில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைப்பிரிவுகளில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு அந்தந்த பயிற்றுனர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
குரலிசைக்கு இலக்கியாவும், பரதநாட்டியத்திற்கு பாலபாரதியும், ஓவியத்திற்கு ஹேமாஸ்ரீயும், சிலம்பத்திற்கு முருகேசனும் பயிற்சி அளித்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 180 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த முகாமின் நிறைவு நாள் விழா நேற்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கவுரவ செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுநிலை ஆசிரியர் விஜயநாராயண பெருமாள் வாழ்த்தி பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நெடுஞ்சாலைத்துறையின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் கருணாமூர்த்தி கலந்து கொண்டு, சிறுவர்-சிறுமிகளுக்கு கலை பண்பாட்டுத்துறை சான்றிதழை வழங்கினார். விழாவில் சிறுவர்-சிறுமிகள் தாங்கள் பயிற்சியில் கற்றுக்கொண்ட பரதநாட்டியம், சிலம்பம், ஓவியம், குரலிசை ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.