திருக்காட்டுப்பள்ளி அருகே, வயலில் விவசாயி பிணம் - சாவில் மர்மம் உள்ளதாக மனைவி புகார்

திருக்காட்டுப்பள்ளி அருகே வயலில் விவசாயி ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.;

Update:2019-05-12 03:30 IST
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சேவியர்பிரிட்டோ(வயது42). விவசாயி. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் தங்கையா நகரை சேர்ந்த ரோசி(41) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சேவியர்பிரிட்டோ தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சேவியர்பிரிட்டோ மைக்கேல்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விவசாய பணிகளை செய்து வந்தார்.

நேற்று காலை மைக்கேல்பட்டியில் உள்ள வயலுக்கு சேவியர்பிரிட்டோ சென்றார். அங்கு அவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து மாத்தூரில் உள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாத்தூரில் இருந்து மைக்கேல்பட்டி வந்த ரோசி தனது கணவர் உடலை பார்த்துவிட்டு திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதில் அவர் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளது என்றும் தனது கணவர் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மைக்கேல்பட்டிக்கு சென்று சேவியர்பிரிட்டோ உடலை கைப்பற்றி திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்