குடியாத்தம் பகுதியில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு 31 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
குடியாத்தம் பகுதியில் தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் குறைபாடு இருந்த 31 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.;
குடியாத்தம்,
குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமன், போக்குவரத்து துணை ஆணையர் (பொறுப்பு) சத்யநாராயணன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் என்.ராமகிருஷ்ணன் தலைமையில் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.வெங்கடராகவன், வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.ஏ.ஞானவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாசில்தார் டி.பி.சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) லதா மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், பரதராமி, லத்தேரி, பள்ளிகொண்டா, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 43 பள்ளிகளின் 160 வாகனங்களில் ஆவணங்களை சரிபார்த்தனர்.
பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, சரியான அளவில் படிக்கட்டுகள் மற்றும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் அளித்தனர்.
இதில் 31 வாகனங்களில் குறைபாடுகள் இருந்ததால் அதனை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு கொண்டுவர திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
பள்ளி வாகன டிரைவர்களிடம் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது குறித்தும், அந்தந்த நிறுத்தங்களில் வாகனம் நிற்கும்போது மாணவர்களை பாதுகாப்பாக ஏறி, இறங்குவதை உறுதி செய்தபின்பு வாகனத்தை எடுக்க வேண்டும் எனவும், வாகனங்களில் கண்டிப்பாக உதவியாளர் அல்லது நடத்துனர் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்களுக்கு 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வாகனங்களில் உள்ள மாணவர்களை மீட்பது குறித்தும், தீயை அணைப்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காட்டினர்.