தஞ்சை அருகே திட்டை சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சை அருகே திட்டை சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.;

Update:2019-05-13 04:00 IST
தஞ்சாவூர்,

நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர் குருபகவான். ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களினால் வரும் தோ‌ஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குரு. எனவே குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லாத சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இப்படி பிரசித்தி பெற்ற திட்டை கோவில் தஞ்சையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மற்ற நாட்களை விட வியாழக்கிழமை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.

தஞ்சை–விக்கிரவாண்டி சாலை


திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலின் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவிலில் காரியசித்தி ஆஞ்சநேயர் மிகவும் விசே‌ஷமாக போற்றப்படுகிறார். இந்த கோவிலிலும் வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த 2 கோவில்களுக்கு செல்வதற்காக தஞ்சையில் இருந்து அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களிலும் ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தஞ்சை–கும்பகோணம் பைபாஸ் பிரிவு சாலையில் இருந்து திட்டைக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த சாலை திருக்கருக்காவூர் வரை செல்கிறது. தஞ்சை–விக்கிரவாண்டிக்கு இடையே பைபாஸ் சாலை போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திட்டை–திருக்கருக்காவூர் சாலையை கடந்து பைபாஸ் சாலை செல்கிறது.

விரைந்து முடிக்கப்படுமா?


இதனால் திட்டை சாலையை விரிவாக்கம் செய்து பைபாஸ் சாலையுடன் இணைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக ஏற்கனவே நல்லநிலையில் இருந்த சாலையை விரிவாக்கம் செய்து புதிதாக போடுவதற்காக பொக்லின் எந்திரம் மூலம் சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. பின்பு ஜல்லி கொட்டப்பட்டு, அவை புல்டோசர் மூலம் சமப்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு மேல் தார் ஊற்றி புதிதாக சாலை போடப்படவில்லை. இதனால் சாலையில் முழுவதும் சிறு, சிறு கற்களாக கிடக்கின்றன. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இப்படி கற்கள் கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், கார்களில் செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பஸ் சென்றால் புழுதி பறக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது வேகமாக செல்ல முடியவில்லை. சிறு, சிறு கற்கள் சாலை முழுவதும் கிடப்பதால் அதில் வாகனங்களை ஓட்டி செல்லும்போது டயர் பாதிக்கப்படுகிறது. புழுதி பறப்பதால் சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. தஞ்சை–விக்கிரவாண்டி இடையே போடப்படும் பைபாஸ் சாலையுடன் இணைப்பதற்காக திட்டை சாலை புதிதாக போடப்பட்டு வருகிறது.

இந்த பணியை விரைவாக முடிக்க வேண்டும். திட்டை கோவிலுக்கு ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் தான் வந்து செல்கின்றனர். 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மோசமாக காணப்படுவதால் மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே உடனடியாக சாலை போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்