தளி அருகே வாலிபர் அடித்துக்கொலை போலீசார் விசாரணை

தளி அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2019-05-14 03:45 IST
தேன்கனிக்கோட்டை,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள சிலிபிலிமங்களம் ஏரி அருகில் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவரது கையில் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் பச்சை குத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது கழுத்து, கால் மற்றும் கை, பகுதிகளில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு, உடலை மர்ம நபர்கள் அங்கு வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து போலீசார், அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்