கோபி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கோபி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
கடத்தூர்,
கோபி அருகே உள்ள மேவானி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி சாவித்திரி (வயது 45). சந்திரசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டார். சாவித்திரி விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோபியில் இருந்து மேவானி நோக்கி மொபட்டில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை, மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். மேவானி அருகே கருங்கரடு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த மர்மநபர், சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை வெடுக்கென பறித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்திரி திருடன், திருடன் என்று சத்தம் போட்டு கத்தினார். இருப்பினும் மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சாவித்திரி கோபி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை விலைவீசி தேடி வருகிறார்கள்.