உளுந்தூர்பேட்டை அருகே, பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - முதியவர் கைது, 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி கொளஞ்சி (வயது 54). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(64) என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கொளஞ்சி புதிதாக கட்டி வரும் வீட்டில் சிமெண்டு பூசும் பணி நடந்தது.
அப்போது தொழிலாளர்கள் சிமெண்டு கழிவுகளை ஆறுமுகத்துக்கு சொந்தமான இடத்தில் கொட்டியதாக தெரிகிறது. இதை பார்த்த ஆறுமுகம், கொளஞ்சியை தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், தனது மனைவி செல்வி, மகன் சக்திவேல், அவரது மனைவி ரேவதி ஆகியோருடன் சேர்ந்து கொளஞ்சியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கொளஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வி உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.