புதுவை அருங்காட்சியகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்காட்சி

புதுவை அருங்காட்சியகத்தில் தமிழ் பிராமி எழுத்துகளின் கண்காட்சி நடக்கிறது.;

Update:2019-05-19 04:00 IST
புதுச்சேரி,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ந் தேதியன்று உலக அருங்காட்சியக தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு தமிழ் பிராமி எழுத்துகள் குறித்த கண்காட்சி புதுவை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் கலந்துகொண்டு அந்த கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார். அதில் புதுச்சேரி மாநிலம் அரிக்கன்மேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள், கலை பொருட்கள், ஓடுகள், பச்சை மணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதுகுறித்து இயக்குனர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு அரிக்கன்மேடு துறைமுகம் தொடர்பான கண்காட்சியை நடத்தினோம். இந்த ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகள் குறித்த ஆதாரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளோம்.

குறிப்பாக அரிக்கன்மேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பிராமி எழுத்துகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியை ஏற்பாடு செய்த வேல்முருகன் கூறியதாவது:-

கி.மு. 3-ம் நூற்றாண்டிலேயே புதுவையில் வெளிநாட்டுடன் வணிக தொடர்பு இருந்தது. இது அரிக்கன்மேடு அகழ்வாராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. அரிக்கன்மேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் இப்போது கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

லத்தீன், ரோமானியர்கள் காலத்து ஓடுகள், இத்தாலியில் பயன்படுத்திய நாணயங்கள் இங்கு உள்ளன. இவை அந்த நாடுகளுடன் புதுச்சேரிக்கு இருந்த வணிக தொடர்புகளை நமக்கு தெரிவிக்கின்றன. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

மேலும் செய்திகள்