விழுப்புரத்தில், ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனைக்காக வைத்திருந்த 1 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் உள்ள பழக்கடைகளில் ரசாயன கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதையடுத்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், முருகன், சமரேசன், அன்புபழனி, கதிரவன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள பழக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 5 கடைகளில் செயற்கை முறையில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனைக்காக வைத்திருந்த 1 டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். அதோடு தடை செய்யப்பட்ட 5 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்து அவற்றை அழித்தனர். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இதுபோன்ற செயற்கை முறையில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பழ வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.