கறம்பக்குடியில் பயன்படுத்தாமலேயே சேதமடைந்த தனிநபர் கழிவறைகள்

கறம்பக்குடியில் முறையாக கட்டப்படாததால் பயன்படுத்தப் படாமலேயே தனிநபர் கழிவறைகள் சேதமடைந்து விட்டன.;

Update:2019-05-23 04:30 IST
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அம்புக்கோவில் சாலையில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காலனி வீடுகள், கட்டப்பட்டதால் இடிபாடுகளுடன் சேத மடைந்த நிலையிலேயே அனைத்து வீடுகள் உள்ளன. இந்நிலையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கறம்பக்குடி நரிக்குறவர் காலனியில், 52 குடும்பத்தினருக்கும் தலா ரூ.15 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு கற்களால் தடுப்பை ஏற்படுத்தி ஒரு தகர கதவு மட்டுமே பொருத்தப்பட்டது. எந்த கழிவறையிலும் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட வில்லை. கழிவறைகளுக்கான வசதியுடன் முறையாக கட்டப்படாததால் இந்த கழிவறையை பயன்படுத்தாமல் அந்த காலனி மக்கள் வெட்ட வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.

அவல நிலை

இந்த கழிவறைகள் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் பயன்படுத்தாமலேயே சேதமடைந்து விட்டன. கதவுகள் உடைந்தும், சிமெண்டு தடுப்புகள் பெயர்ந்தும் உள்ளன. கஜா புயலால் காலனி வீடுகள் சேத மடைந்த நிலையில், இந்த கழிவறைகளின் மேல் விளம்பர பதாகைகள் கட்டி குடியிருப்பாய் மாற்றி வசிக்கும் அவல நிலையும் உள்ளது. சில கழி வறைகளில் பழைய துணி மூட்டைகளை சிலர் போட்டு வைத்துள்ளனர். அனைவருக்கும் சுகாதாரம் என்ற நிலையை உருவாக்க நடைமுறை படுத்தப்பட்ட திட்டம் மக்களுக்கு பயன்படாமலேயே வீணாகி இருப்பது சமூக ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது. எனவே பயன்படுத்த முடியாத தனிநபர் கழிவறைகளை புதுபித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்