கடலூர், தென்பெண்ணையாற்றில் மிதந்த 2 ஆண் பிணங்கள் - போலீசார் தீவிர விசாரணை
கடலூர் தென்பெண்ணையாற்றில் 2 ஆண் பிணங்கள் மிதந்தன. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
கடலூர்,
கடலூர் குண்டுசாலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் பின்புறம் உள்ள தென்பெண்ணையாற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் 40 வயது மதிக்கத்தக்க 2 ஆண் பிணங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் தகவல் அறிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கே திரண்டனர்.
அப்போது 2 ஆண் பிணங்களும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை?.
அதில் ஒருவர் நீலநிறத்தில் பூப்போட்ட லுங்கி, வெள்ளைநிறத்தில் கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், இன்னொருவர் பச்சை நிறத்தில் கோடு போட்ட டீசர்ட், கருநீல நிறத்தில் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்திருந்தனர். பின்னர் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூரில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வழியாக சென்று புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட சோரியாங்குப்பத்தில் மது, சாராயம் குடித்துவிட்டு சிலர் வருகின்றனர். அப்போது சிலர், குடிபோதையில் ஆற்றுக்குள் மயங்கி விழுந்து இறந்துவிடுகிறார்கள்.
அதுபோலத்தான் தற்போது இறந்துள்ள இந்த 2 ஆண் களும் அளவுக்கு அதிகமான குடிபோதையில் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இருப்பினும் பிரேதபரிசோதனை அறிக்கை வந்ததால்தான் அவர்களின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த வாரதில் மட்டும் பெண்ணையாற்றில் இருந்து 4 பிணங்களை கைப்பற்றி இருக்கிறோம் என்றார்.