வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், குறைந்து வரும் பரப்பலாறு அணை நீர்மட்டம் - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் பரப்பலாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.;

Update:2019-05-23 04:15 IST
சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, விருப்பாட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கனஅடி ஆகும். பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 300 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

இந்தநிலையில் வடகாடு மலைப்பகுதியில் மலையில்லாததால் பரப்பலாறு அணை வேகமாக வறண்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 61.40 அடியாக உள்ளது. எனவே இந்த கோடை காலத்தில் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

காரணம் அணை தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் அதன் நீர்த்தேக்க பகுதியில் மண் மேவி காணப்படுகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதியில் 30 முதல் 35 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளதால் மழைக்காலங்களில் விரைவாக அணை நிரம்பி, உபரிநீர் வீணாக செல்கிறது.

எனவே இந்த கோடையை பயன்படுத்தி அணையை தூர்வாரினால் மட்டுமே வருகிற பருவமழையின் போது, அணையில் முழுமையான அளவில் நீரை தேக்க முடியும் என்றும், அவ்வாறு தேக்கினால் தான் விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க முடியும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அணையின் நீர் இருப்பு குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பரப்பலாறு அணையில் உள்ள தண்ணீரை கொண்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும் கோடைமழை பெய்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டால், இந்த பருவத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை’ என்றனர்.

மேலும் செய்திகள்