நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல், மந்தமாக நடந்த வாக்கு எண்ணிக்கை

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடந்தது.;

Update:2019-05-24 04:15 IST
தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டார். தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் தங்கதமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது, மக்கள் நீதிமய்யம் சார்பில் ராதாகிருஷ்ணன் உள்பட மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் லோகிராஜன் (அ.தி.மு.க.), மகாராஜன் (தி.மு.க.), ஜெயக் குமார் (அ.ம.மு.க.), அருணாதேவி (நாம் தமிழர் கட்சி), அழகர்சாமி (மக்கள் நீதிமய்யம்) உள்பட மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மயில்வேல் (அ.தி.மு.க.), சரவணக்குமார்(தி.மு.க.), டாக்டர் கதிர்காமு(அ.ம.மு.க.), சோபனா (நாம் தமிழர் கட்சி), பிரபு (மக்கள் நீதிமய்யம்) உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த நாளில் இருந்து நேற்று வரை 1 மாத காலத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

வாக்கு எண்ணிக்கைக்காக நேற்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைகளில் இருந்து, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் முன்னிலையில் அறை கதவுகளின் ‘சீல்’ அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங் கள் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்து வரப்பட்டன. இதேபோல் தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் அடங்கிய பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றி வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த வாக்குகள் எண்ணப்பட்டன.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்தது. அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கி உள்ளதால், தலா 14 மேஜைகள் வீதம் 84 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்தது.

வாக்கு எண்ணும் அறையில், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும், வேட்பாளர் களின் முகவர்களுக்கும் இடையே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி வீதம் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக் குடன் முகவர் களுக்கு தெரிவிக்கப்பட்டது. முகவர்கள் அவற்றை குறிப்பெடுத்துக் கொண்டனர்.

வாக்கு எண்ணிக்கை மந்தமாகவே நடந்தது. பிற்பகலுக்குள் முன்னணி நிலவரங்கள் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பகல் 2 மணி வரை தேனி நாடாளுமன்ற தொகுதியில் 3 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டுமே முடிந்து இருந்தது. இதேபோல், பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மந்தமாகவே இருந்தது.

14 மேஜைகளிலும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அந்த விவரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேகரித்தனர். அவ்வாறு சேகரித்த விவரங்களை சரிபார்த்து, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை ராணுவ வீரர்கள், ஆயுதப்படை போலீசார், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 900-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் அறையிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

மேலும் செய்திகள்