ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் சத்யா வெற்றி

ஓசூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளரை விட 23,213 வாக்குகள் அதிகம் பெற்றார்.

Update: 2019-05-23 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை (தனி), பர்கூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஓசூர் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

இதன் பின்னர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பாலகிருஷ்ணரெட்டி பதவியில் இருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் பாலகிருஷ்ணரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பதவி இழந்தார்

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே கடந்த 1998-ம் ஆண்டு சாராய விற்பனையை கண்டித்து போராட்டம் நடந்தது. அதில் போலீசாரின் வாகனம் உள்பட பொதுச்சொத்துக்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதாக பாலகிருஷ்ணரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு பின்னர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் கடந்த 7.1.2019 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதனால் ஓசூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இடைத்தேர்தல்

இந்த தேர்தலில் ஓசூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தி.மு.க. சார்பில் ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர். ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தி.மு.க. வெற்றி

நேற்று கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளரை விட 23,213 வாக்குகள் அதிகம் பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்காளர்கள் - 3,27,294

பதிவான வாக்குகள்-2,28,709

செல்லாதவை-35

1. எஸ்.ஏ.சத்யா (தி.மு.க.) -1,15,027

2. ஜோதி பாலகிருஷ்ணரெட்டி (அ.தி.மு.க.) - 91,814

3. ராஜசேகர் (நாம் தமிழர் கட்சி)- 6740

4. ஜெயபால் (மக்கள் நீதி மய்யம்) - 8032

5. ஷேக் முனவர் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -445

6. அமீனுல்லா (சுயே)-202

7. தேவப்பா (சுயே)-363

8. புகழேந்தி (அ.ம.மு.க.) - 1432

9. முருகன் (சுயே) -357

(நோட்டாவுக்கு 4,262 பேர் வாக்களித்து உள்ளனர். இந்த தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டியை தவிர மற்ற 7 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்).

மேலும் செய்திகள்