வடகுச்சிப்பாளையம் ஏரியை ஆழப்படுத்தி, கரையை உயர்த்த வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
வடகுச்சிப்பாளையம் ஏரியை ஆழப்படுத்தி, கரையை உயர்த்த வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிப்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் உள்ள செங்கத்தாங்கல் ஏரியை தூர்வாரி, கும்பகோணம் நெடுஞ்சாலைக்கு கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.
மிகச்சிறிய ஏரி என்பதால் நெல் பயிரிடும்போது பயிரில் கதிர்கள் வரும் சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் நெற்பயிர்கள் காய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே இந்த ஏரியை இன்னும் ஆழப்படுத்த வேண்டும். ஏரிக்கரையில் உள்ள முட்புதர்களை அகற்றி கரையை உயர்த்த வேண்டும். ஏரிக்கு நீர் வருகின்ற வாய்க்காலை வாதானூர் வாய்க்கால் பிரிவில் இருந்து ஏரியின் நுழைவுவாயில் வரை ஆழப்படுத்த வேண்டும். ஆடு, மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக ஏரிக்கரையில் சாய்வான வழித்தடம் அமைக்க வேண்டும். ஏரியில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் நலச்சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொசுப்புழு ஒழிப்பு பணியில் கடந்த 10 ஆண்டுகளாக தினக்கூலி ரூ.275-ஐ பெற்று பணியாற்றி வருகிறோம். நாங்கள் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு கொசு ஒழிப்பு பணியையும் செய்து வருகிறோம். சுமார் 40 கிலோ மீட்டர் வரை சென்று இந்த பணியை செய்து வருகிறோம். இதற்கு பஸ் கட்டணம் ரூ.100 வரை செலவாகிறது. மீதமுள்ள ரூ.175-ஐ வைத்து இன்றைய விலைவாசிக்கு ஏற்றவாறு குடும்பத்தை காப்பாற்றவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் முடியவில்லை. ஆகவே எங்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் எங்களுக்கு தினக்கூலி குறைந்தபட்சம் ரூ.500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதோடு எங்களுக்கு தொடர்ந்து பணி வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
பூசாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாரதி கண்ணம்மாள் என்ற மகளிர் சுய உதவிக்குழுவினர், கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நாங்கள், வறுமைக்கோட்டின் கீழ் வசித்து வருகிறோம். எங்களது சுயஉதவி குழுவில் 160 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எங்களில் யாருக்கும் வீட்டுமனை இல்லை. இதுசம்பந்தமாக பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.