திருவாரூர்-காரைக்குடி ரெயில் பட்டுக்கோட்டைக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தது

திருவாரூர்-காரைக்குடி ரெயில் 2 மணி நேரம் தாமதமாக பட்டுக்கோட்டைக்கு வந்தது.;

Update:2019-06-02 04:30 IST
பட்டுக்கோட்டை,

திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் நேற்று முதல் வருகிற ஆகஸ்டு 30-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. மேலும் பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின் கடந்த மார்ச் 29-ந்தேதி அதிவேக சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை உடனே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஏற்கனவே பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறப்பு ரெயில் இயக்கம் குறித்த அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டது.

அதன்படி நேற்று முதல் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் ஆலத்தம்பாடி திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம் ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று பட்டுக்கோட்டைக்கு 11.30 மணிக்கு வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 8.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு 1.25 மணிக்கு வந்து சேர்ந்தது.

இதனால் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு 2 மணி நேரம் ரெயில் தாமதமாக வந்ததாக தெரிகிறது. பின்னர் மதியம் 1.33 மணிக்கு ரெயில் புறப்பட்டு ஒட்டங்காடு, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றது. பயணிகள் ரெயில் வருவதை காண ரெயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

முன்னதாக பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் சங்கத்தலைவர் என்.ஜெயராமன், தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ரெயில் பயண நேரத்தை குறைக்க காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் இடையே உள்ள அனைத்து ரெயில்வே கேட்டுகளுக்கும் நிரந்தரமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு நேர விரைவு ரெயில்களை இருமுனைகளிலிருந்தும் தினசரி இயக்க வேண்டும். ராமேஸ்வரம் - சென்னை இடையே இந்த வழித்தடத்தில் பகல் நேர விரைவு ரெயில்களை (அந்தியோதயா) இருமுனைகளிலிருந்தும் தினசரி இயக்க வேண்டும். தென் மாவட்டங்களிலிருந்து, வடமாநிலங்களுக்கு இந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகளை தொடங்க வேண்டும். காரைக்குடி, மயிலாடுதுறை, நாகூர் வரை இருமுனைகளிலிருந்தும் பயணிகள் ரெயில்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்