லாரி மோதியதில் காயம் அடைந்த பெண் போலீஸ் ஏட்டுவின் இடது கால் அகற்றப்பட்டது

சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருச்சி மாநகர ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டு சரண்யா (வயது 30) லாரிக்கு அடியில் சிக்கினார்.;

Update:2019-06-03 04:15 IST
திருச்சி,

திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டில் இருந்து கே.கே. நகரில் உள்ள மத்திய தானிய கிடங்கிற்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரி நேற்று முன்தினம் சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள ஒரு கடைக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த என்ஜினீயர் அஜீத் ரகுமான் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருச்சி மாநகர ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டு சரண்யா (வயது 30) லாரிக்கு அடியில் சிக்கினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரையும் மேலும் 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சரண்யாவை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். லாரிக்கு அடியில் சிக்கியதில் கால் எலும்பு சிதைந்ததால் சரண்யாவின் இடது காலை அகற்றினால் தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறி விட்டனர். இதனை தொடர்ந்து நேற்று சரண்யாவின் இடது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 

மேலும் செய்திகள்